பாரிய அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்படுவதற்குத் தகவல் வழங்கிய ஒற்றரைக் கொலை செய்து, அவரது தலையை குறித்த விசாரணையை மேற்கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வீட்டின் முன் வைக்கும் ஒப்பந்தத்தைப் பொறுப்பேற்ற கூலிப்படை கொலையாளி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதி கிரிந்த கடற்கரையில் சுமார் 350 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.
அதன் அப்போதைய பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இது கைப்பற்றப்பட்டது.
இதன்போது 7 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். குறித்த போதைப்பொருள் தொகுதி தற்போது டுபாயில் மறைந்திருக்கும் ‘அங்கொடை பிரியந்த’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என மேலதிக விசாரணைகளில் தெரியவந்தது.
தமது போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமையால் அவர் பொலிஸார் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார்.
அதற்கமைய, ரொஹான் ஓலுகலவுக்குத் தகவல் வழங்கியது யார் என்பதை குறித்த கடத்தல்காரர் தேடிக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒற்றர் பற்றிய தகவலை அறிந்த பின்னர், அவரைக் கொலை செய்து அவரது தலையை ஓலுகலவின் வீட்டிற்கு அனுப்பும் ஒப்பந்தத்தை பாதாள உலகக் கும்பல் ஒன்றிடம் அங்கொடை பிரியந்த ஒப்படைத்தார்.
இதற்கிடையில், பாதாள உலகக் கும்பல் தன்னைத் தேடுவதை அறிந்த ஒற்றர், தனது வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகினார்.
பின்னர், இச்சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்குப் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்கவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, கொலை ஒப்பந்தத்தைப் பெற்ற நபர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த சதித்திட்டம் தொடர்பான தகவல்கள் அம்பலமாகின.


















