-ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு-
பாதாள உலகக் குழுக்களை முற்றாக இல்லாதொழிப்போமென சூளுரைக்கும் அரசாங்கம் நடைமுறையில் அக்குழுக்களின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் வெளியிடுகையில்:
நாட்டின் சட்ட ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக் கூறி ஆட்சிப்பீடம் ஏறிய இந்த அரசாங்கம் இன்று பாதாள உலகக் குழுக்களின் கைகளில் சிக்கிக் கொண்டுள்ளது.
சட்டத்தரணிகள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் பகிரங்கமாகச் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். பாதாள உலகத்தை ஒழிப்பதாகக் கூறும் அரசின் வாக்குறுதி வெறும் மேடைப் பேச்சாகவே முடிந்துவிட்டது.
அண்மையில் தலங்கம பகுதியில் சட்டத்தரணி தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நீதித்துறையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து கொண்டு பாதாள உலகக் குழுத் தலைவர்கள் இலங்கையில் உள்ள கூலிப்படையினரை இயக்குகின்றனர்.
இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறுவது ஏன்? புலனாய்வுப் பிரிவுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?
ஒருபுறம் ‘சுத்தமான நாடு’ பற்றிப் பேசிக்கொண்டு, மறுபுறம் பாதாள உலகக் குழுக்களின் கொலைக்களமாக இலங்கை மாறுவதற்கு இந்த அரசாங்கம் இடமளித்துள்ளது.
குற்றவாளிகளைக் கூண்டில் அடைப்பதற்குப் பதிலாக, அவர்களைத் தப்பிக்கவிடும் அல்லது கட்டுப்படுத்த முடியாத பலவீனமான சூழலே தற்போது நிலவுகின்றது. இந்த விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை வேடம் போடுவதை நிறுத்திவிட்டு, மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
தற்போது மக்கள் மத்தியில் அநுர அரசாங்கம் பாதாள உலகக் குழுக்களுக்கு மறைமுகமாகத் துணை போகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இல்லையெனில், இவ்வளவு உயர்மட்டப் படுகொலைகள் தொடர்ந்து இடம்பெறுவது எவ்வாறு? நாட்டின் சட்டவாட்சி மற்றும் நீதியை நிலைநாட்டத் தவறிய இந்த அரசுக்கு எதிராக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார்.


















