களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் உள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து அங்கிருந்த சுமார் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான இனிப்புப் பண்டங்களை திருடியதாக கூறப்படும் சிறுமிகள் மூவரை களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
களுத்துறையில் உள்ள சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்து கல்வி கற்கும் 13, 14 மற்றும் 15 வயதுடைய மூன்று சிறுமிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு, பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தினேஷ் சில்வாவின் தலைமையில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்புகமரா காட்சிகளை பரிசோதித்ததன் மூலம் குறித்த சிறுமிகள் அடையாளம் காணப்பட்டனர்.
இதையடுத்து, சிறுவர் இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 40 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய இனிப்புப் பண்டங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. இச்சம்பவம் குறித்து களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.















