-ஆதரவாக வாக்களித்த 107 நாடுகள்
-வாக்களிப்பை புறக்கணித்த இலங்கை, இந்தியா
ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்காக, ஐ.நா சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு 107 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியா, இலங்கை உள்பட 51 நாடுகள் இந்த வாக்களிப்படை புறக்கணித்துள்ளன.
5 வருடங்களாக நீடித்துவரும் இந்தப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இப்போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா முன்னிலையில் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை உடனடியாக நிறுத்துவதற்கு அழைப்பு விடுத்து, ஐ.நா சபையில் வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு பிரிட்டன், அவுஸ்ரேலியா, கனடா, பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், போலாந்து உள்பட 107 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
இருப்பினும், இந்தியா, அமெரிக்கா, சீனா, இலங்கை, வங்கதேசம், பஹ்ரைன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 51 நாடுகள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்து, நடுநிலை வகித்தன. மேலும், கியூபா, ஈரான், மாலி, ப்ருண்டி, பெலாரஸ், ரஷ்யா கூட்டமைப்பு, சூடான்,நைஜர் உள்ளிட்ட 12 நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு எதிரான வாக்களித்தன.
போர் நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.


















