அக்குரேகொட பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், தலைமறைவாக இருந்த இரண்டாவது துப்பாக்கிதாரியும் மொனராகலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இக்கொலைச் சம்பவத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட நான்கு வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.
இதில் ஒரு வாகனம் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன், எரிக்கப்பட்ட வாகனத்தைச் செலுத்திய சாரதியைத் தவிர ஏனைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும், இந்த முழுச் சம்பவத்தையும் பின்னணியிலிருந்து இயக்கிய பிரதான சூத்திரதாரியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நேற்று புதன்கிழமை பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய மேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த இது குறித்த மேலதிக விபரங்களை வெளியிட்டார்.
இந்தக் கொலைச் சம்பவம் ஒரு பாதாள உலகக் குழுவினால் மிகவும் நுணுக்கமான முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றாகும். ஆரம்பத்தில் பொலிஸாரிடம் கார் ஒன்றில் வந்தவர்கள் சுட்டுவிட்டுத் தப்பினர் என்ற மிகக் குறைந்த தகவலே இருந்தது. எனினும், சிறிய தகவல்களைக் கூட ஆதாரங்களாக மாற்றி முன்னெடுத்த விசாரணைகளில் தற்போது 80 சதவீத முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது என சஜீவ மெதவத்த தெரிவித்தார்.
இரண்டாவது துப்பாக்கிதாரியைப் பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியிருந்த நிலையில், பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் நேற்று மொனராகலை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதனுடன் இக்கொலையில் சம்பந்தப்பட்ட இரண்டு துப்பாக்கிதாரிகளும் தற்போது பொலிஸ் வசம் உள்ளனர். இவர்களுடன் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மொனராகலையிலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்.


















