தென்கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, அந்நாட்டின் வெளிவிவகார பிரதி அமைச்சர் யுயி-ஹே சிசிலியா சுங் ஆகியோருக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை புதன்கிழமை சியோலில் நடைபெற்றது.
இலங்கை மற்றும் தென்கொரியாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார மீட்சிக்கு அமைவாக பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல், இலங்கையர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையை விரிவுபடுத்துதல், அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளி அனர்த்தத்தின் பின்னர் தென்கொரியா வழங்கிய உதவிகளுக்கு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தனது நன்றிகளைத் தெரிவித்தார். அத்துடன், இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் தேசிய முயற்சிகளுக்குத் தென்கொரியாவின் தொடர்ச்சியான ஆதரவையும் அவர் இதன்போது கோரினார்.


















