கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் 61 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்த இலங்கை, நடப்பு ரி-20 உலகக் கிண்ணத்திலிருந்து வெளியெறியது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை பந்தவீச்சாளர்கள் 16 ஓவர்கள் வரை மிகத் திறமையாக பந்துவீசி நியூஸிலாந்து துடுப்பாட்ட வீரர்களை நெருக்கடிக்குள்ளாக்கினர்.
16 ஆவது ஓவர் நிறைவில் நியூஸிலாந்து 6 விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
அதுவரை கட்டுப்பாட்டுடன் பந்துவீசிய இலங்கை பந்துவீச்சாளர்களை மிச்செல் சாட்;னரும் கோல் மெக்கொன்ச்சியும் கடைசி நான்கு ஓவர்களில் நையப்புடைத்தனர். அவர்கள் இருவரும் 7 ஆவது விக்கெட்டில் 47 பந்துகளில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்டெடுத்தனர்.
அவர்களது அதிரடி ஆட்டத்தினால் கடைசி 4 ஓவர்களில் நியூஸிலாந்து 70 ஓட்டங்களைக் குவித்தது.
மிச்செல் சென்ட்னர் 47 ஓட்டங்களையும் கோல் மெக்கொன்ச்சி ஆட்டம் இழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்களைவிட ரச்சின் ரவிந்த்ரா 32, பின் அலன் 23, க்லென் பிலிப்ஸ் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 3 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இப் போட்டியில் நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 169 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை 107 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
கமிந்து மெண்டிஸ் 31, துனித் வெல்லாலகே 29, பவன் ரத்நாயக்க 10 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ரச்சின் ரவிந்த்ரா 4 விக்கெட்களையும் மெட் ஹென்றி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகனாக ரச்சின் ரவிந்திரா தெரிவானார்.


















