-இஸ்ரேலால் கொல்லப்பட்ட அதிகளவான போர் செய்தியாளர்கள்
-700க்கும் அதிக செய்தியாளர்களின் குடும்பங்களும் கொலை
-சிறைகளில் மட்டும் 330 ஊடகவியலாளர்கள் தடுத்து வைப்பு
உலகம் முழுவதும் கடந்த ஆண்டில் செய்திக் சேகரிப்புப் பணியின்போது 129 செய்தியாளர்கள் கொல்லப்பட்டதாகப் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு (சிபிஜே) தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டுகளைவிட இந்த எண்ணிக்கை ஒரு புதிய உச்சமாகும். குறிப்பாக, இதில் மூன்றில் இரண்டு பங்கு உயிரிழப்புகளுக்கு இஸ்ரேலின் தாக்குதல்களே காரணமாக இருந்துள்ளன.
சி.பி.ஜே அறிக்கையின்படி, செய்தியாளர்களின் கொலைகள் 2025 இல் தொடர்ந்து 2 ஆவது ஆண்டாக அதிகரித்துள்ளது. இறந்த 129 பேரில், சுமார் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் போர், மோதல் நிலவும் பகுதிகளில் பணியாற்றியவர்கள்.
சுமார் 86 பேர் இஸ்ரேல் தாக்குதலில் இறந்துள்ளனர். இதில் காஸாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீன செய்தியாளர்கள் (60 சதவீதத்தினர்) மட்டுமின்றி, யேமனில் ஹெளதி ஊடக மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த 31 ஊடகப் பணியாளர்களும் அடங்குவர். இஸ்ரேலைத் தவிர்த்து, உள்நாட்டுப் போர் நிலவும் சூடானில் 9 பேரும், உக்ரைனில் ரஷிய படைகளால் 4 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
நவீனப் போர் முறையில் செய்தியாளர்களைக் கொல்லும் புதிய ஆயுதமாக ட்ரோன் உருவெடுத்துள்ளது. 2023 இல் வெறும் 2 உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்த ட்ரோன் தாக்குதல்கள், 2025 இல் 39 ஆக அதிகரித்துள்ளன. இஸ்ரேல் மட்டுமன்றி சூடான், உக்ரைன், யேமனிலும் செய்தியாளர்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
போர் மேகங்கள் சூழாத இந்தியா, மெக்ஸிகோ, பிலிப்பின்ஸ் போன்ற ஜனநாயக நாடுகளிலும் நிலைமை மோசமாகவே உள்ளது. மெக்ஸிகோவில் கடந்த ஆண்டில் 6 பேரும், பிலிப்பின்ஸில் 3 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஊழலை வெளிச்சம் போட்டுக்காட்டிய முகேஷ் சந்திரக்கர் போன்றவர்களின் மரணம், உள்ளூர் அளவில் செயல்படும் செய்தியாளர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
செய்தியாளர்களைக் கொல்வதோடு மட்டுமல்லாமல், அவர்களை அச்சுறுத்த குடும்பத்தினரைக் குறிவைக்கும் கொடூரமான போக்கும் அதிகரித்துள்ளது. 2023, அக்ரோபர் முதல் காஸாவில் சுமார் 700க்கும் மேற்பட்ட செய்தியாளர்களின் குடும்பத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, 2025, டிசெம்பர் முதலாம் திகதி நிலவரப்படி, உலகம் முழுவதும் 330 செய்தியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















