தற்போதைய அரசாங்கம் வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த போதிலும், நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்றுள்ள பாரிய முறைகேடுகள் குறித்து மௌனம் காப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதான அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு, மேலும் தெரிவிக்கையில்,
நிலக்கரி கொள்வனவு விவகாரத்தில் அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையினால் இலங்கை மின்சார சபைக்கு பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் காரணமாக, இலங்கை மின்சார சபைக்கு சுமார் 7,672 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை 8 கப்பல்களில் நிலக்கரி வந்துள்ள நிலையில், இந்த நிலக்கரிகள் தரமற்றவையாக இருப்பதோடு, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் அவை கொண்டுவரப்படவில்லை. இது அப்பட்டமான ஒப்பந்த மீறலாகும்.
சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் நிலக்கரியை 60 முதல் 70 டொலர்களுக்கு கொள்வனவு செய்ய வாய்ப்புள்ள நிலையில், அரசாங்கம் 98 டொலர் என்ற மிக உயர்ந்த விலைக்கு தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது.
கடந்த காலங்களில் மருந்து இறக்குமதி போன்ற விவகாரங்களில் அமைச்சர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என வலியுறுத்திய தற்போதைய அரசாங்கத் தரப்பினர், இப்போது மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.
இந்த மோசடி தொடர்பாக ஜனாதிபதி உடனடியாக ஒரு குழுவொன்றை நியாயமான விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்.இந்த விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றார்.


















