இலங்கைக் கடற்பரப்பிற்கு அப்பால், ஈரானியக் கப்பல் ஒன்றின் மீது நீர்மூழ்கிக் கப்பல் நேற்று புதன்கிழமை தாக்குதல் நடத்தியதாக Reuters செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு குறைந்தது 101 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 32 பேர் பலத்த காயமடைந்தவர்கள் உட்பட மொத்தம் 78 பேர் காயமடைந்துள்ளனர்.

முன்னதாக, மூழ்கிக்கொண்டிருந்த ஈரானியக் கப்பலில் இருந்த 32 பேரை இராணுவம் மீட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது. அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், ஏழு பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் சிறு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சின் உயர்மட்ட அதிகாரி டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
180 பேருடன் பயணித்த ‘IRIS Dena’ என்ற கப்பல் ஆபத்தில் இருப்பதாக இலங்கைக் கடற்படைக்கு தகவல் கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகளுக்காக இலங்கைக் கப்பல்கள் மற்றும் விமானப்படை விமானங்களை அனுப்பியதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
போரின் ஐந்தாவது நாளில், அமெரிக்காவும் இஸ்ரேலும் தெஹ்ரான் மற்றும் பிற நகரங்கள் மீது பல வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இஸ்ரேல், ஈரானியத் தலைமை மற்றும் பாதுகாப்புப் படைகளைக் குறிவைத்த அதேவேளையில், இஸ்லாமியக் குடியரசு (ஈரான்) இஸ்ரேல் மீதும் பிராந்தியம் முழுவதிலும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்தது.


















