-பிரதமர் ஹரிணி அமரசூரிய-
பெண்களின் உழைப்பைப் போற்றும் நீதியான சமூகம் மற்றும் பாதுகாப்புமிக்க பொருளாதாரத்திற்காக தேசிய பாதுகாப்புப் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது மிகவும் அவசியம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் நாடாளுமன்றத்தில் முன்வைத்த ‘தேசிய பாதுகாப்பு முறையை உருவாக்க வேண்டும்’ என்ற யோசனை குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் எனது கன்னி உரையின் போது பெண்களின் பாதுகாப்பு பொருளாதாரம் பற்றி நான் பேசினேன். அப்போது இந்த சபையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்களே இருந்தனர். அன்று அந்தத் தலைப்பு ஒரு புதிய விடயமாகப் பார்க்கப்பட்டது.
ஆனால், இன்று நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் இந்த விடயத்தைப் பற்றி பேச ஒரு பலமான குழு இருப்பதை இட்டு மகிழ்ச்சியடைகிறேன். அந்த உரையாடல் இன்று ஒரு தேசியக் கொள்கையாக முன்மொழியும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
உள்ளூராட்சி மன்றங்கள், சமூக நிறுவனங்கள், அரச சேவை, கல்வித் துறை என அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ள சூழலில், இவ்வாறானதொரு தீர்மானமிக்க தலைப்பு குறித்து உரையாடுவது மிகவும் முக்கியமானது.
பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்த வேண்டுமானால், ஒரு பிரஜையாக அனைத்துத் துறைகளிலும் சமமான மற்றும் கௌரவமான முறையில், தனது விருப்பத்திற்கேற்ப பங்கேற்பதற்கான உரிமையை அங்கீகரிக்க வேண்டும். அதற்குத் தடையாக உள்ள பிரதான காரணிகளை அகற்ற நாம் தலையிட வேண்டும்.
பெண் அரசியல் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் இக்காலத்தில், பெண்கள் அச்சமின்றி கௌரவத்துடன் சமூகம், அரசியல் மற்றும் கலாசாரத்தில் ஈடுபட வேண்டுமானால், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அவர்களது கௌரவம் பாதுகாக்கப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும்.
இது சட்டத்தினால் மட்டும் நிகழக் கூடாது.ஒரு சமூக மாற்றத்தின் ஊடாகவே நிகழ வேண்டும். அந்த சமூக மாற்றத்தின் மூலம் பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் கிடைக்க வேண்டும் என்றார்.


















