2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் கீழ் முன்மொழியப்பட்டதற்கிணங்க, லலித் அத்துலத்முதலி மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு ரூபா 7,500 இலிருந்து 10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்பு 2026 ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. 2026 ஜனவரி மாதத்திற்குரிய ரூபா 10,000 புலமைப்பரிசில் கொடுப்பனவு இன்று 10 ஆம் திகதி மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவானது மஹபொல நம்பிக்கை நிதியம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக திறைசேரியினால் கூட்டாக நிதியளிக்கப்படுகின்றது.
தற்போதுள்ள ஏற்பாடுகளின்படி 48 வீதம் மஹபொல நம்பிக்கை நிதியத்தாலும், 52 வீதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக அரசாங்கத்தாலும் வழங்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி வரையிலான காலப்பகுதியில் மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு இருமுறை தலா 2,500 ரூபா வீதம் திருத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 5,000 ரூபாவாக இருந்த புலமைப்பரிசில் கொடுப்பனவு இருமடங்காக (ரூ.10,000) அதிகரிக்கப்பட்டுள்ளது.


















