பாடசாலை பேருந்து சேவையை மேலும் விஸ்தரிப்பதற்காக இந்த ஆண்டில் 200 க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை புதிதாக இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இசுறுபாயவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தினர்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவை இணைந்து இந்த ‘சிசு செரிய’ பேருந்து சேவையை நடைமுறைப்படுத்துகின்றன.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பாடசாலை மாணவர் போக்குவரத்து தொடர்பான அரசின் எதிர்காலத் திட்டம் குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போது, பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பாகப் போக்குவரத்துச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதற்காக இந்த ஆண்டில் சுமார் ஒரு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


















