-சுகாதாரம், நீர்வழங்கல், சுங்கத்துறையினருக்கு வேலை
-பாடசாலைகள், பல்கலைகள் நீதிமன்றங்களுக்கு பூட்டு
-அரச நிகழ்வுகள் அனைத்தும் ரத்துச் செய்ய தீர்மானம்
-அறிவித்தார் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, ஒவ்வொரு வாரமும் புதன் கிழமையை அரச விடுமுறை தினமான பிரகடனப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்ட அவர், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழலையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
சுகாதாரம், நீர்வழங்கல், சுங்கம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை வழங்கல் துறைகள் இந்த விடுமுறை தினத்துக்கு உட்படாது.
அத்துடன், பாடசாலை, நீதிமன்றம், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவைகளுக்கு இந்த விடுமுறை தினம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஏனைய நான்கு நாட்களில் பணிக்கு அழைக்கப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் தீர்மானம் எடுக்க நிறுவன தலைவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளையும் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதனை தனியார் துறையினரும் பின்பற்றுவற்கு பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது.


















