-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி-
மத்திய கிழக்கு போர் சூழலால் இலங்கையின் எண்ணெய் இறக்குமதியில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் அரசாங்கம் ஒரு அபாய மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளதா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27/2 இல் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 2022 ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட எரிபொருள் நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன் மூலம் ஆபத்தான பொருளாதார நெருக்கடி உருவானது.
எனவே, நாட்டின் வலுச்சக்தி பாதுகாப்பு தொடர்பாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இந்த சபைக்கு விளக்கம் அளிக்குமாறு அமைச்சரிடம் கோருகிறேன். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் நிலைமை காரணமாக இலங்கைக்கு மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதியில் ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் அரசாங்கம் ஒரு அபாய மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளதா?
தற்போது நாட்டில் உள்ள எரிபொருள் கையிருப்பு எவ்வளவு? அது இன்னும் எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக காணப்படுகின்றன? அவசர தேவைகளுக்காக பயன்படுத்தக்கூடிய பெற்றோலிய கையிருப்பை இலங்கை பேணி வருகிறதா? அவ்வாறானால் அதன் அளவு என்ன?
உலகளாவிய எண்ணெய் விநியோகம் தடைப்படும் அல்லது விலைகள் சடுதியாக அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் நாட்டின் எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாகப் பேணிச் செல்வதற்கு வலுச்சக்தி அமைச்சு பின்பற்றும் அவசரகால முகாமைத்துவத் திட்டம் யாது?
உலக சந்தையில் எண்ணெய் விலை 20மூ முதல் 30மூ வரை அதிகரிப்பு ஏற்பட்டால், அது நாட்டின் எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் மற்றும் தேசிய பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து வலுச்சக்தி அமைச்சு கணக்கீடொன்றை மேற்கொண்டுள்ளதா?
2026.03.15 முதல் மீண்டும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு விஞ்ஞான பூர்வ அடிப்படையாக கொண்டா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன?
எரிபொருள் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள இது போன்ற தருணத்தில் மின்உற்பத்தி, சுகாதார சேவைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் ஒதுக்கீடு செய்வதற்காக வகுக்கப்பட்டுள்ள தேசிய முன்னுரிமை பொறிமுறை யாது? என்பன போன்ற பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.


















