-மட்டக்களப்பில் போராட்டம்-
மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும், குறித்த சம்பவத்தினை நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும் நேற்று கொக்கட்டிச்சோலை நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மண்முனை தென்மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் இளையதம்பி கிரேஸ்குமாரன் தலைமையில் மண்முனை தென்மேற்குப் பிரதேச முச்சக்கர வண்டி உரிமையாளர் நலன்புரி கூட்டுறவுச்சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரும், இன்னுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் வேளை இத்தகைய கொடூரங்களை நிகழ்த்திய சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது எனவும், சந்தேக நபர்களுக்கு உயரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியும், மாவட்டத்தில் இனிமேல் இவ்வாறான குற்றங்கள் இடம்பெறாவண்ணம் பொலிஸார் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது துணைபோகாதே துணைபோகாதே கொலைக்குற்றவாளிகளுக்குத் துணை போகாதே, போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், நீதியை நிலை நாட்ட அநீதிக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம், கை வைக்காதே கை வைக்காதே பெண்கள் மீதும் சிறுவர்கள் மீதும் கை வைக்காதே, வழங்கு வழங்கு விரைவாக நீதியை வழங்கு போன்ற வாசகங்களை ஏந்தியவாறு கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை சந்தியில் இருந்து பிரதேசசபை வரையில் பேரணியாக இடம்பெற்று பிரதேச சபையின் முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.


















