கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றிற்கு தனியார் பேருந்து மூலம் சிசிரிவி கமராவிற்குள் மறைத்து அனுப்பிவைக்கப்பட்ட 34 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவரே நேற்று முன்திம் அதிகாலை இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் கொழும்பில் அடையாளம் தெரியாத நபரொருவர் சிசிரிவி கமரா அடங்கிய பொதி ஒன்றைப் பேருந்து நடத்துனரிடம் ஒப்படைத்து, குறித்த பொதியை அதில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு அக்கரைப்பற்றில் ஒப்படைக்குமாறு கோரியுள்ளார்.
இது குறித்துக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, காவல்துறையினர் அதிகாலை மூன்று மணி முதல் அக்கரைப்பற்று நகர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதையடுத்து குறித்த பேருந்து அக்கரைப்பற்றை வந்தடைந்ததும் நடத்துனர் வழங்கிய தகவலின்படி பொதியை வாங்க வந்த இளைஞரை மறைந்திருந்த காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.


















