நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ்.பிரேமதிலக்கவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.
நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்தக் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் மூன்று வினாக்கள் முன்கூட்டியே கசிந்தமை தொடர்பில் பெற்றோர் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், 2024 டிசம்பர் 31 ஆம் திகதி தனது தீர்ப்பை அறிவித்தது.
குறித்த வினாத்தாள் கசிந்ததன் மூலம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் இதன்போது சுட்டிக்காட்டியது.
இந்த பாரிய பரீட்சை மோசடிக்கு முக்கிய பொறுப்புதாரியாகக் கண்டறியப்பட்ட தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ்.பிரேமதிலக்க, தனது சொந்தப் பணத்திலிருந்து 3 மில்லியன் ரூபாவை நட்டஈடாக அரசுக்குச் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேலும், குறித்த தொகையை நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் செலுத்தி முடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும், நீதிமன்றம் விதித்த அந்த நட்டஈட்டுத் தொகையைச் செலுத்தத் தவறியமை மற்றும் நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்தியமை தொடர்பிலேயே, அவருக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதி இதுவரை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றிற்கு அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கமைய, நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் பணிப்பாளருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை வாசித்துக் கையளிக்கப்பட்டது.


















