-நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை-
பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்பது, விற்பனை செய்ய மறுப்பது போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அதிகாரசபை மேலும் கூறியுள்ளதாவது, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஊழல் தடுப்பு பிரிவினால் அரிசியை கையிருப்பில் வைத்துக்கொண்டு அதனைச் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மறுத்த சில வர்த்தகர்களுக்கு எதிராக, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை கிருலப்பனை பொதுச் சந்தை தொகுதியில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பண்டிகைக் காலத்தில் அரிசி மற்றும் அத்தியாவசிய உணவுகள் தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தொடர்ச்சியான சோதனைகளும், பிரதேச மட்டத்திலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொருட்களைக் கையிருப்பில் வைத்துக்கொண்டு விற்பனை செய்ய மறுப்பது மற்றும் அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்வது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


















