-க.கனகராசா-
பால் சார்ந்த விற்பனை நிலையங்கள் தூய்மையை சரியான வகையில் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் இல்லையேல் தண்டப்பணத்துடன் 6 மாதகால சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் பருத்தித்துறை நீதவான் தெரிவித்துள்ளார்.
நெல்லியடி பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட மாதாந்த பரிசோதனையின் போது, நெல்லியடி பகுதியில் இயங்கி வரும் பால் சார்ந்த விற்பனை நிலையத்தில் இலையான் கட்டுப்பாடு பேணாமை மற்றும் நிலத்தின் ஒருபகுதி அழுக்காக பேணியமைக்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதன் போது பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் 5 ஆண்டுக்கான ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இதேவேளை இவ்வழக்கின் தீர்ப்பின் போது நீதவான் பால் சார்ந்த உணவுகள் விற்பனை செய்யும் நிலையங்கள் தூய்மையை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இதனைக் கருத்தில் கொள்ளாதோருக்கு தண்டப் பணத்திற்கு மேலாக 6 மாதகால சிறைத்தண்டனை வழங்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.


















