-பிரதியமைச்சர் ரத்ன கமகே-
கடல் வள முகாமைத்துவத்திற்காக சீனாவின் ஒத்துழைப்பை இலங்கை எதிர்பார்ப்பதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே பெய்ஜிங்கில் கடந்த 25 முதல் 27 வரை நடைபெற்ற ‘ZGC 2026 Forum Annual Conference’ சர்வதேச மாநாட்டில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியா மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாடு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய விசேட தலைப்புகளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மகாநாட்டில், பிரதி அமைச்சர் மேலும் பேசுகையில்:
இந்தியப் பெருங்கடலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தைக் கொண்டுள்ள ஒரு நாடாக இலங்கை விளங்குவதால், நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியன சமுத்திர வளங்களையே பிரதான ஆதாரமாகக் கொண்டுள்ளது.
எனவே, கடல் வள முகாமைத்துவத்திற்காக சீனா போன்ற தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளுடன் சர்வதேச ரீதியாக இணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
குறிப்பாக, அறிவியல் தரவுகளின் அடிப்படையிலான கடல்சார் கொள்கைகளை வகுத்தல், நவீன மீன்பிடிக் கலன் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், செய்மதித் தொழில்நுட்பம் மூலம் கடல் வளங்களைக் கண்காணித்தல் மற்றும் ஆழ்கடல் ஆய்வுகளுக்கு சீனாவின் ஒத்துழைப்பை இலங்கை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
காலநிலை மாற்றங்களுக்கு மத்தியில் கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதற்கு இரு நாட்டு ஆய்வு நிறுவனங்களுக்கு இடையே மாணவர் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத் திட்டங்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் பிரதியமைச்சர் தனது உரையில் விரிவாக விளக்கினார்.


















