நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் மொத்த கொள்வனவாளர்களில் அரைவாசிப் பேர் சந்தைக்கு வராததால், தினமும் சுமார் 50,000 கிலோகிராம் மரக்கறிகள் மற்றும் பழங்கள் வீணாவதாக தேசிய மரக்கறி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நிமல் ஹேவாவிதாரண தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 13 விசேட பொருளாதார மத்திய நிலையங்களுக்கு, சுமார் 03 இலட்சம் விவசாய குடும்பங்கள் தமது உற்பத்திகளை விநியோகித்து வருகின்றன. நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) மாத்திரம் சுமார் 20 இலட்சம் கிலோ கிராம் மரக்கறிகள் சந்தைக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், அவற்றைக் கொள்வனவு செய்ய போதிய வியாபாரிகள் இருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
தமக்குத் தேவையான எரிபொருள் முறையாகக் கிடைக்காமையினால், மரக்கறி விநியோகத்தில் ஈடுபடும் லொறி உரிமையாளர்கள் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை மாத்திரமே சந்தைக்கு வருகின்றனர். குறைந்தது வாரத்தில் நான்கு நாட்களாவது எரிபொருள் கிடைக்காத காரணத்தினால், அவர்கள் கொள்வனவு நடவடிக்கைகளிலிருந்து விலகியுள்ளனர்.
போட்டியான விலையில் மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய வியாபாரிகள் முன்வராததால், மொத்த விற்பனை விலைகள் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளன. இதனால் விவசாயிகளின் சித்திரைப் புத்தாண்டு கனவு நனவாவது கேள்விக்குறியாகியுள்ளதாக தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன், பெரும்பாலான மரக்கறிகளின் மொத்த விலை 30 ரூபாய் முதல் 120 ரூபாவிற்கு இடைப்பட்ட மட்டத்திலேயே காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















