உலகளாவிய மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தின் மிக முக்கிய கடல் மார்க்கமான ஹோர்முஸ் நீரிணை அனைத்து வகையான கப்பல்களின் போக்குவரத்துக்கும் முற்றிலும் மூடப்பட்டுள்ளதாக ஈரானின் மத்திய கட்டளையகம் அறிவித்துள்ளது.
ஈரானின் அரசுக்குச் சொந்தமான ‘பிரஸ் டிவி’ ஊடகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானின் ‘காதம் அல்-அன்பியா’ மத்திய தலைமையகம் இந்த உத்தியோகபூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, எண்ணெய் கப்பல்கள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் உட்பட எந்தவொரு சர்வதேச கப்பலும் இனி இந்த நீரிணையைக் கடக்க அனுமதி இல்லை.
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துச் செல்ல முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் இலக்கு வைக்கப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும். தெற்கு ஈரானிய மாகாணத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் உட்பட, அதன் ‘தொடர்ச்சியான பகைமை நடவடிக்கைகளுக்கு’ பதிலடியாகவே இந்த மூடல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாக ஈரான் கூறுவதை அமெரிக்க இராணுவம் முற்றிலுமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,
“சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் இன்று இரவும் எவ்வித தடையுமின்றி ஹோர்முஸ் நீரிணை வழியாக வழக்கம் போல் பயணித்துக் கொண்டிருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று ஈரானியப் படைகளால் தாக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை “முற்றிலும் தவறானது” என அமெரிக்க மத்திய கட்டளையகம் நிராகரித்துள்ளது. “எந்தவொரு அமெரிக்க போர்க்கப்பலும் தாக்கப்படவில்லை” என்றும் அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள இந்த கடல் மார்க்கம் தொடர்பாக இரு நாடுகளும் முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு வருவதால், சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
















