இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், “ஷி ஜின்பிங்: சீனாவின் ஆட்சிமுறை (தொகுதி V)” (Xi Jinping: The Governance of China – Volume V) நூல் குறித்த வாசகர் மன்றம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் கடந்த ஜூலை 03 ஆம் திகதி மிக விமர்சையாக நடைபெற்றது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
சீனாவின் நவீனமயமாக்கல் மற்றும் அந்த நாடு கண்டுள்ள அபார வளர்ச்சியின் பின்னணியிலுள்ள “அறிவுசார் இரகசியங்களை” அறிந்துகொள்வதற்கான ஒரு அதிகாரப்பூர்வமான ஆவணமாக இந்த 5 ஆம் தொகுதி விளங்குகின்றது.
குறிப்பாக, மக்களை முதன்மைப்படுத்துதல் (Putting people first) மற்றும் சீர்திருத்தங்களை ஆழப்படுத்துதல் போன்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி அனுபவங்கள் இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி “செழிப்பான தேசம், அழகான வாழ்க்கை” என்ற இலக்கை அடைய முயலும் இலங்கைக்கு, இந்த நூலில் கூறப்பட்டுள்ள வழிகாட்டல்கள் பெரும் உதவியாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
அடுத்த ஆண்டு இலங்கை – சீனா இடையிலான ராஜதந்திர உறவுகளின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது.
இதனை முன்னிட்டு துறைமுகப் பொருளாதாரம், நவீன விவசாயம், டிஜிட்டல் பொருளாதாரம், புதிய ஆற்றல் மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற துறைகளில் இலங்கையுடன் இணைந்து செயற்படச் சீனா தயாராக உள்ளதாகத் தூதுவர் இதன்போது உறுதிப்படத் தெரிவித்தார்.
இந்த நூல் சீனாவிற்கு மாத்திரமன்றி, உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் அனைத்து நாடுகளுக்கும் ஒரு வழிகாட்டியாக அமையும் எனவும், நாகரிகங்களுக்கிடையிலான பரிமாற்றங்களை இது ஊக்குவிக்கும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
“இந்த நூல் ஒரு ஜன்னலைப் போன்றது; இதன் ஊடாக இலங்கை மக்கள் புதிய யுகத்தின் சீனாவைப் புரிந்துகொள்ள முடியும்” என சீனத் தூதுவர் தனது உரையில் ஆழமாகத் தெரிவித்தார்.
கலந்துரையாடல்கள் மற்றும் பரஸ்பர கற்றல் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப இது ஒரு பாலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















