திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் சேவையாற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள், PickMe செயலியின் கட்டண நிர்ணயம் மற்றும் சேவை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து (03) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அலஸ்தோட்டம் சந்தியில் இருந்து பேரணியாக புறப்பட்ட சாரதிகள், மூன்றாம் கட்டை வழியாக PickMe அலுவலகத்தை அடைந்து தங்களது கோரிக்கைகளை நிறுவன பிரதிநிதிகளிடம் முன்வைத்தனர்.
சாரதிகள் தெரிவித்ததாவது, திருக்கோணமலை பகுதியில் PickMe செயலி மூலம் நிர்ணயிக்கப்படும் கட்டணங்கள் மிகவும் குறைவாக இருப்பதால் தங்களுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. உதாரணமாக, திருக்கோணமலையில் இருந்து சிகிரியா செல்ல ரூ.9,000 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிரியாவில் இருந்து திருக்கோணமலை வர ரூ.12,000 அறவிடப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்தக் கவனயீர்ப்பில் திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை தவிசாளர் வெள்ளத்தம்பி சுரேஷ்குமார் கலந்துகொண்டு PickMe நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இதன்போது, சாரதிகளின் கோரிக்கைகளுக்கு 14 நாட்களுக்குள் உரிய தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், வெளிப்பிரதேச வாகனங்கள் தொடர்பாக பிரதேச சபை முன்னர் நிறைவேற்றிய தீர்மானம் குறித்த சர்ச்சை தொடர்பிலும் பொலிஸார் இன்று விசாரணை மேற்கொண்டதுடன், அதுகுறித்து தவிசாளர் விளக்கமளித்தார்.


















