இராகலை சென்லெனாட்ஸ் தோட்டத்தில் வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கு உடனடியாக மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதாக தெரிவித்த அவர், 35 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்த குடும்பங்கள் ஒரே நாளில் நிர்கதியான நிலையில், இந்த விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறையும் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த ஜனவரி மாதமே நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தும், ஆறு மாதங்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அதனை அறிவிக்காதது தோட்ட முகாமைத்துவத்தின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார்.
அத்துடன், தற்போது வீடிழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டங்களின் ஊடாக உடனடியாக மாற்று குடியிருப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட அமைச்சையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


















