புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்கும் யோசனையை முன்வைக்கவும், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவும் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளன.
பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ள நிலையில் குறித்த பிரேரணையை எதிர்வரும் திங்கட்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளனர்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் புதன்கிழமை (6) பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.
இந்த சந்திப்பின் போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசாங்கம் மந்தகரமாக செயற்படுவத சுட்டிக்காட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா, புதிய யாப்புருவாக்கத்துக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதற்கமைய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தெரிவுக்குழு அமைத்தல் தொடர்பான யோசனையை கொண்டு வர தீர்மானித்துள்ளது.
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர மீது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை பதவியில் வைத்துக் கொண்டு முறையான விசாரணைகளை மேற்கொள்வது கடினமாகும் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவரை பதவி நீக்கம் செய்வதற்கான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதற்கமைய இந்த நம்பிக்கையல்லா பிரேரணைக்கு எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ள நிலையில் அதனை எதிர்வரும் திங்கட்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளனர்.
















