தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பெலவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையின்போது, வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்று மீட்கப்பட்டதுடன், வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், இராணுவம், விமானப்படை, இலங்கை பொலிஸ் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆதரவுடன் நேற்று (22) இந்த விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
பெருமளவில் நாய்கள் வளர்க்கப்பட்டு, மிகவும் அசுத்தமான நிலையில் காணப்பட்ட வீடொன்றைச் சோதனையிட்டபோது, உயிருள்ள டெங்கு நுளம்புக் குடம்பிகளுடன் துப்பாக்கியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பொலிஸார் துப்பாக்கியை பொறுப்பேற்றதுடன், வீட்டின் உரிமையாளரையும் கைதுசெய்துள்ளனர்.
இதேவேளை, மற்றொரு வீட்டில் உயிருள்ள நுளம்புக் குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள வீட்டின் உரிமையாளர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் வளாகங்களைப் பராமரித்த குற்றச்சாட்டின் கீழ், 13 பேருக்கு எதிராக கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


















