இந்திய திரையுலகின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
சுமார் ரூ.4,000 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியுள்ளார். இந்திய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரெய்லரில் ராவணனாக யஷ் கம்பீரமான தோற்றத்துடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். குறுகிய நேரமே இடம்பெற்றிருந்தாலும், சீதையாக சாய் பல்லவியின் தோற்றமும் பாராட்டைப் பெற்றுள்ளது.
ஆனால், ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரின் தோற்றம் எதிர்பார்த்த தெய்வீக உணர்வை முழுமையாக வழங்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளின் கிராபிக்ஸ் தரம் எதிர்பார்த்த அளவில் இல்லை என்றும், சில காட்சிகள் தொலைக்காட்சி தொடரைப் போன்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிஜி (CGI) பணிகள் முழுமையாக நிறைவடையாமல் ட்ரெய்லர் வெளியிடப்பட்டதா என்ற கேள்வியையும் ரசிகர்கள் முன்வைக்கின்றனர்.
இதே தரத்தில் கிராபிக்ஸ் படத்திலும் இடம்பெற்றால், முன்னதாக விமர்சனங்களுக்கு உள்ளான ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தைப் போன்ற நிலை ஏற்படக்கூடும் என்றும் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை, இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி இந்த படத்தை இயக்கியிருந்தால் இன்னும் பிரம்மாண்டமான அனுபவமாக அமைந்திருக்கும் என்ற கருத்தையும் சில ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ட்ரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசுபொருளாக மாறியுள்ள ‘ராமாயணா’, திரையரங்குகளில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பது அதன் வெளியீட்டுக்குப் பின்னரே தெரியவரும்.

















