ரஷ்யா மற்றும் அதன் பெட்ரோலியப் பொருட்களின் முக்கிய வாடிக்கையாளர்களான சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளைத் தண்டிக்கும் சட்டமூலத்திற்கு, அமெரிக்க செனட் சபை பெருவாரியான வாக்குகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது.
இத்தகைய வர்த்தகம் உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்ய உதவுவதாகவும் செனட் சபை தெரிவித்துள்ளது.
‘லின்ட்ஸி ஓ.கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரானைத் தண்டிக்கும் சட்டம் 2026’ (the Lindsey O.Graham Sanctioning Russia and Iran Act of 2026) எனப் பெயரிடப்பட்ட இந்த சட்டமூலம், செனட் சபையில் 86-11 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த சட்டமூலம், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100 சதவீத வரிகளை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுமதி அளிக்கிறது.
தற்போதைய நிலவரப்படி, சீனா, இந்தியா, அஜர்பைஜான், ஹங்கேரி மற்றும் ஸ்வாக்கியா ஆகியவை ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளாக உள்ளன.
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளுடன் சேர்த்து, ஈரானின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களைத் தண்டிக்கும் 1996 ஆம் ஆண்டின் ஈரான் பொருளாதாரத் தடைச் சட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தை 2031 வரை இந்த சட்டமூலம் நீடிக்கிறது.
உக்ரைனின் தீவிர ஆதரவாளரான மறைந்த குடியரசுக் கட்சி செனட்டர் லின்ட்ஸி கிரஹாம் மற்றும் ஜனநாயகக் கட்சி செனட்டர் ரிச்சர்ட் ப்ளூமெந்தல் ஆகியோரால் இரு கட்சிகளின் ஆதரவுடன் இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
கீவ் நகருக்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து செனட்டர் கிரஹாம் திடீரென காலமானதை அடுத்து, உக்ரைனின் கூட்டாளியான மறைந்த செனட்டரின் பாரம்பரியத்தை கெளரவிக்கவும், இந்த சட்டமூலத்தை நிறைவேற்றவும் இரு கட்சிகளின் தலைவர்களும் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டதாக கூறப்படுகின்றது.
















