பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்டமையானது, கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்குப் பழிவாங்கும் செயலாக நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள கரந்தெனிய சுத்தாவின் தரப்பினரால், கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்குப் பழிவாங்கும் வகையிலேயே இந்தப் படுகொலைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் சந்தேகிக்கின்றனர்.
கெஹெல்பத்தர பத்மேவுடன் சேர்ந்து பெக்கோ சமனும் இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரும் கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அத்துடன், கஜ்ஜா மற்றும் அவரது இரு பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவத்துடனும் பெக்கோ சமனுக்குத் தொடர்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, துப்பாக்கிதாரிகள் வந்த மோட்டார் சைக்கிள் மாத்தறை, தம்பஹல, பொல்வத்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்று (13) காலை ஊருபொக்க பொலிஸாரால் மீட்கப்பட்டது.
மித்தேனிய, உலஹிட்டியாவ, பதலங்கல கெதர பகுதியில் நேற்று (12) மாலை 6.00 மணியளவில் இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகளால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அங்குள்ள CCTV கெமராவிலும் பதிவாகியுள்ளது.
9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கியால் நடத்தப்பட்ட இத்தாக்குதலில், துப்பாக்கிதாரிகள் அந்தப் பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் சுமார் 7 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அதன் பின்னர் துப்பாக்கிதாரிகள் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மித்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.


















