
47 வயதான சந்திரசேகரன் முரளிதரன், அவரது 42 வயதான மனைவி ஷைலஜா முரளிதரன் மற்றும் அவர்களது மகன்களான 14 வயது அஷ்வின், 11 வயது ஆருஷ் ஆகிய நால்வரும், நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்துக்குப் பின்னர் காணாமல் போயுள்ளனர்.
மவுண்ட் கைலாஷ் யாத்திரையில் பங்கேற்பதற்காக சென்றிருந்த இக்குடும்பம், Himalayan Glacier Adventures நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த குழுவுடன் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினரின் தகவலின்படி, காலை உணவை முடித்த பின்னர் திபெத்–நேபாள எல்லைக்கு அருகிலுள்ள குடிவரவு சோதனைச் சாவடியை நோக்கிப் பயணிக்க குழு தயாராகிக் கொண்டிருந்தபோது அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் வசித்து வரும் முரளிதரன் குடும்பம், அங்குள்ள தமிழ் சமூகத்தில் நன்கு அறியப்பட்ட குடும்பமாகும்.
சந்திரசேகரன் ஒரு Chartered Professional Engineer என்பதுடன், சிட்னியில் புவித்தொழில்நுட்ப பொறியியல் துறையில் பணியாற்றி வருகிறார். அவரது தொழில்முறை சுயவிவரத்தில் Foundation Earth Sciences நிறுவனத்துடன் தொடர்புடையவராக குறிப்பிடப்பட்டுள்ளார்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சந்திரசேகரன், மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர் என்பதுடன், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.
சந்திரசேகரன், ஷைலஜா, அஷ்வின் மற்றும் ஆருஷ் ஆகியோர் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் குடும்பத்தினர் தொடர்ந்து காத்திருக்கின்றனர்.
ஷைலஜாவின் சகோதரி அவுஸ்திரேலிய ஊடகங்களிடம், குடும்பத்தினர் “கவலையுடன் இருந்தாலும் நம்பிக்கையுடன்” இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேபாளம் முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த பேரழிவு வெள்ளத்தால் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. பல கிராமங்கள், வீதிகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் ஏற்பட்ட பேரழிவில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளதாகவும், 1,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறைந்தது 39 அவுஸ்திரேலியர்கள் காணாமல் போயுள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் உறுதிப்படுத்தியுள்ளார்.
காணாமல் போனவர்களின் இருப்பிடம் மற்றும் நலன் குறித்து கண்டறிய அவுஸ்திரேலிய அதிகாரிகள் நேபாளத்தில் அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், மீட்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக கூடுதல் தூதரக மற்றும் மனிதாபிமான பணியாளர்களை நேபாளத்திற்கு அவுஸ்திரேலிய அரசு அனுப்பியுள்ளது. பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் ($5 million) நிதியுதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.


















