தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரசினுடைய அதிகார பின்னணியில் விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் இப்படியான விடயங்கள் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினுடைய கோர முகத்தினை மீண்டும் மீண்டும் சர்வதேச சமூகத்திற்கும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து ஏமாந்த தமிழ் மக்களுக்கும் வெளிப்படுத்துகின்றது. அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்ற ஊடகவியாளர்களுடைய உரிமைகளுக்கும் பாதுகாப்பிற்க்கும் நாங்கள் எப்போதும் அரணாக நிற்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
தமிழர் தாயகத்தில் ஆளும் தரப்பினருடைய அதிகார துஷ்பிரயோகங்கள் வரம்பு மீறி செல்கின்றன. அது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டியது எங்களது கடமையாகும். தமிழர் தாயகப் பகுதிகளில் பிரபாகரன் டிலக்சன் எனும் ஊடகவியலாளர் அரச ஆதரவோடு அச்சுறுத்தப்பட்டிருக்கிறார். தமிழர் தாயகப் பகுதிகளில் பல ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் பலர் காணாமலாக்கப்பட்டு இருக்கிறார்கள். பலர் அச்சுறுத்தப்பட்டு நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். ஒரு சிலர் இன்றுவரை அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாட்டில் ஊடகப் பணியாற்றி வருகின்றார்கள்.
இந்தச் சூழலில் புதிய ஒரு ஆட்சி மலந்திருக்கின்றது நாங்கள் மக்களுடைய ஜனநாயகத்தை உறுதிப்படுத்துகின்றோம் என சர்வதேசத்துக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் போலியான முகத்தை காட்டுகின்ற தற்போதைய அரசாங்கத்தினுடைய ஒரு அரச ஊடகத்தில் பணியாற்றும் பிரபாகரன் டிலக்சன் எனும் ஊடகவியலாளர் அரசினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைக்கவில்லை என அவருக்கு எதிராக பல்வேறுபட்ட அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் விசாரணைகளும் முடக்கி விடப்பட்டுள்ளன. இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்ந்த தமிழ் தேசிய பேரவையாகவும் மனித உரிமைகளை மதிக்கின்ற ஒரு சட்டத்தரணியாகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்.
ஊடகம் என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண். அந்த நான்காவது தூணை சுதந்திரமாக, சுயாதீனமாக செயற்பட விட வேண்டும். நடுநிலையாக செயல்படுகின்ற ஊடகவியலாளர்களை இலக்கு வைப்பது என்பது தமிழ் சமூகத்துக்கே பாதிப்பை தரக்கூடிய விடயமாகும்.
தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரசினுடைய அதிகார பின்னணியில் விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் இப்படியான விடயங்கள் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினுடைய கோர முகத்தினை மீண்டும் மீண்டும் சர்வதேச சமூகத்திற்கும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து ஏமாந்த தமிழ் மக்களுக்கும் வெளிப்படுத்துகின்றது. அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்ற ஊடகவியாளர்களுடைய உரிமைகளுக்கும் பாதுகாப்பிற்க்கும் நாங்கள் எப்போதும் அரணாக நிற்போம்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு பிற்பாடு தமிழர் தாயக பகுதிகளில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியினுடைய அரசாங்கத்தின் சட்டத்தை மீறிய செயற்பாடுகள் அத்துமீறி காணப்படுகிறது. இவர்கள் ஊழலுக்கு எதிராக செயல்படுவதாக கூறுவதும் சட்டத்தினை நடைமுறைப்படுத்தப் போவதாக கூறுவதும் ஒரு அப்பட்டமான நாடகம்.
தேசிய மக்கள் சக்தி கட்சியினுடைய ஊழலுக்கு ஒத்துழைக்காத அரச அதிகாரிகள் மீது வழக்கு தாக்கல் செய்து அவர்களை கைது செய்கிறார்கள். வடமராட்சியில் தேசிய மக்கள் சக்தியினுடைய பிரதேச சபை உறுப்பினர் பிறிதொரு நபரினுடைய காணியில் இருந்த சிசிடிவி கமராவினை கல்லெறிந்து சேதப்படுத்துகின்றார். அவர் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றார். கைது செய்த நபரை 24 மணித்தியாலங்களுக்குள் நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டும். ஆனால் அதிகாலை 3 மணியளவில் பொலிஸார் அந்த பிரதேச சபை உறுப்பினரை விடுவித்திருக்கிறார்கள். இது அப்பட்டமான சட்டவிரோத செயற்பாடாகும்.
குறித்த நபர் சிசிடிவி கமராவை உடைப்பது பற்றிய காணொளிகள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளிவந்திருந்தது. இவ்வாறு சாட்சிகள் உலகம் பூராகவும் பரவிய நிலையிலும் அந்த பிரதேச சபை உறுப்பினரை போலிசார் விடுவிக்கின்றனர். இது தேசிய மக்கள் சக்தியினுடைய அதிகார துஷ்பிரயோகத்தையும், சட்ட மீறலையும் வெளிக்காட்டுகின்றது.
குறித்த பிரதேச சபை உறுப்பினர் நேற்று (நேற்று முன்தினம்) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தன்னோடு இருந்தவர்கள் மது போதையில் இருந்ததாகவும் தான் கல்லெறிந்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார். இதுவே அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரமாகும்.
இப்படி தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாதவர்களுக்கு எதிராக செயல்படும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் வெட்கப்பட வேண்டும். மக்கள் சிந்திக்காது விட்டால் தமிழர் தாயகமே பறிபோகப் போகின்றது. வடக்கு கிழக்கில் தமிழர்களின் காணிகளை சுவீகரிப்பதற்க்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை தடுப்பதற்கு சிங்கள கட்சிகளை வடக்கு கிழக்கில் இருந்து ஜனநாயக ரீதியாக வெளியேற்றுவதே தமிழர்களுடைய இருப்பை நிலை நாட்டுவதற்கான வழியாகும், என்றார்.(12)


















