தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்தை சீரழிக்கும் வகையிலும், இனவாதிகளையும் தமிழ் டயஸ்போராவையும் திருப்திப்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தீவிரவாதம் தொடர்பில் முதன்முதலில் எச்சரிக்கை விடுத்தவர்களில் ஞானசார தேரரும் ஒருவர் எனக் குறிப்பிட்ட சரத் வீரசேகர, அவரது எச்சரிக்கைகள் அன்றே கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுத்திருக்க முடிந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
அவ்வாறான பௌத்த துறவி ஒருவரை கைது செய்து அவரது சீவரத்தை அகற்றியமை மிகவும் ஆபத்தானதும் கண்டிக்கத்தக்கதுமான செயல் என அவர் விமர்சித்துள்ளார்.
பௌத்த வினய விதிகளின்படியும் மகா நாயக்கர்களின் அனுமதியுடனுமே துறவி ஒருவரின் சீவரம் தொடர்பில் முடிவெடுக்க முடியும் எனத் தெரிவித்த அவர், அரச அதிகாரிகளோ அல்லது தனிநபர்களோ தன்னிச்சையாக இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பது அரசியலமைப்பின் அடிப்படையில் அரசாங்கத்தின் பொறுப்பு என சுட்டிக்காட்டிய சரத் வீரசேகர, தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் பௌத்த மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஊடாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மற்றும் கைதுகள் பழிவாங்கும் நடவடிக்கைகள் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை கருத்திற்கொள்ளாமல், அவரது குடும்பத்தினரை இலக்கு வைத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கைகள் என குற்றச்சாட்டு
தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ள அரசாங்கம், தமிழ் பிரிவினைவாதிகள் மற்றும் டயஸ்போராவிடம் வழங்கியதாகக் கூறப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சரத் வீரசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராக இடம்பெறுவதாகக் கூறப்படும் அநீதிகள் மற்றும் விவசாயிகளின் காணிகள் பறிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் அவர் கவலை வெளியிட்டார்.
மக்களிடையே ஏற்பட்டுள்ள எதிர்ப்பை திசைதிருப்புவதற்காகவே இவ்வாறான கைதுகள் இடம்பெறுவதாகவும், இதற்கு எதிராக எதிர்காலத்தில் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.


















