பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன் தலைமையில்,
இன்றைய தினம் (12.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த 08.10.2026 அன்று அலரி மாளிகையில் அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் நாடளவில் தெரிவு செய்யப்பட்ட 1540 கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் 58 பேர் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இப் பயிற்சி நெறி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பயிற்சி நெறியை ஆரம்பித்து வைத்தார்.
நிர்வாக உத்தியோகத்தர் கே.பி. தனபால அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், பதவிநிலை உத்தியோகத்தர்களும் புதிதாக நியமனம் பெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கு வாழ்த்துரைகளை வழங்கினர்.
தலைமையுரை :
இப் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றிய, மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்கள்
கிராம உத்தியோகத்தர்கள் அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான பாலமாகச் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை மூலம் கிடைத்துள்ள இந்த நியமனத்தை ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதி, பொதுமக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் பணியாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், கிராம மட்டத்தில் மக்களுடன் அன்பாகப் பழகி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, தமது சேவையின் ஊடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு உத்தியோகத்தர்கள் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அரசாங்க அதிபர் அவர்களின் வாழ்த்துச் செய்தி :
புதிதாக நியமனம் பெற்ற கிராம உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் – அரசாங்க அதிபர்
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக நியமனம் பெற்ற கிராம உத்தியோகத்தர்கள், தமக்குக் கிடைத்துள்ள அரச நியமனத்தை அரிய வாய்ப்பாகக் கருதி, அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், கிராம உத்தியோகத்தர் பதவி என்பது அரச நிர்வாகக் கட்டமைப்பில் பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புபட்டு, அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் மிக முக்கியமான பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், பல்கலைக்கழகக் கல்வியைப் பூர்த்தி செய்த பல இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத சூழலில், புதிதாக நியமனம் பெற்றுள்ளவர்களுக்குத் தமது சொந்தப் பிரதேசங்களிலேயே கடமையாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது சிறப்பானதாகும் எனத் தெரிவித்தார்.
இந்த வாய்ப்பைச் சரியான முறையில் பயன்படுத்தி, தமது ஆளுமையையும் தொழில்சார் திறன்களையும் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிக் காலத்தை முழுமையாகப் பயன்படுத்தி, அலுவலக நடைமுறைகள், நிர்வாகச் செயற்பாடுகள், ஆவணங்களைத் தயாரித்தல், சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட கடமைகளில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் தகவல்களும் ஆவணங்களும் தெளிவாகவும் சரியாகவும் அமைவதுடன், கடமை நேரத்தைப் பேணிக் கடமைகளைப் பொறுப்புடன் நிறைவேற்றுவது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
அரச உத்தியோகத்தர்கள் தொடர்பாகப் பொதுமக்கள் மத்தியில் காணப்படும் விமர்சனங்களை மாற்றியமைப்பதில் கிராம உத்தியோகத்தர்களுக்கு முக்கிய பங்குண்டு எனத் தெரிவித்த அரசாங்க அதிபர், பொதுமக்களை அன்புடனும் மரியாதையுடனும் அணுகி, அவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு விரைவாகவும் வினைத்திறனுடனும் சேவையாற்ற வேண்டும் என்றார். பொதுமக்களின் திருப்தியும் நம்பிக்கையும் அரச சேவையின் தரத்தை வெளிப்படுத்தும் முக்கியமான அளவுகோல்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
கிராமங்களில் பல்வேறு சமூக, மத மற்றும் சமூகப் பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் வாழ்வதால், எவ்விதப் பாகுபாடுமின்றி அனைவரையும் சமமாக மதித்து, நடுநிலையுடனும் நியாயத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
எந்தவொரு சமூகத்தினருக்கும் சார்பாகச் செயற்படுவதாகத் தோன்றும் நிலையைத் தவிர்த்து, அனைத்து மக்களினதும் நலனைக் கருத்திற்கொண்டு கடமையாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கிராம உத்தியோகத்தர் பதவி என்பது வெறுமனே ஒரு தொழில் அல்ல; அது மக்களின் நம்பிக்கையைப் பெற்றுப் பொதுநலனுக்காகச் செயற்பட வேண்டிய உயரிய பொறுப்பாகும். எனவே, புதிதாக நியமனம் பெற்றவர்கள் தமது பண்புகள், நடத்தை, சேவை மனப்பாங்கு மற்றும் தொழில்சார் திறன்களை மேம்படுத்தி, தமது பிரதேச மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, கிராம உத்தியோகத்தர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த அரசாங்க அதிபர், தமக்குக் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பைச் சரியான முறையில் பயன்படுத்தி, நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பொதுமக்களின் நம்பிக்கைக்குரிய அரச உத்தியோகத்தர்களாகத் திகழ வேண்டும் எனத் தெரிவித்தார்.
பயிற்சி நெறியின் நோக்கம் :
புதிதாக நியமிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் தமது கடமைகளைச் சிறப்பாகவும் வினைத்திறனுடனும் ஆற்றுவதற்குத் தேவையான அறிவு, திறன் மற்றும் நடைமுறை அனுபவங்களை வழங்கும் நோக்கில் இப்பயிற்சி நெறி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறியானது மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதன்படி, மூன்று வாரங்கள் (90 மணித்தியாலங்கள்) மாவட்டச் செயலகத்திலும், நான்கு வாரங்கள் (120 மணித்தியாலங்கள்) பிரதேச செயலகங்களிலும், ஐந்து வாரங்கள் (150 மணித்தியாலங்கள்) கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, கிராம உத்தியோகத்தர்களின் தொடர்பாடல் திறன்கள் தொடர்பான பயிற்சியை உடுவில் நிர்வாக கிராம உத்தியோகத்தர் திரு. எஸ். சிறிஸ்கந்தராஜா வளவாளராகக் கலந்து கொண்டு வழங்கினார்.
இப் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், பிரதம பொறியியலாளர் திரு. கே. திருக்குமரன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. எஸ். ரமேஸ்குமார்,
உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்ஷினி, மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு. பொ. சிறிவர்ணன், சமூர்த்தி கணக்காளர் திரு. இ. முருகதாஸ், மாவட்டச் செயலக கணக்காளர் திரு. வ. ரதீஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.





























