சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான 6ம் கட்ட கடன் தவணை அடுத்துவரும் இரு வாரங்களில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
6 வது கடன் தவணையான 350 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கான உதவிகளை வழங்க இராஜதந்திர தூதுக்குழுக்கள், அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் சர்வதேச கடன் வழங்கும் நிறுவனங்களுடன், நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மேற்படி 6ம் கட்ட நிதி தொடர்பில் தெரிவித்தனர்.
அனர்த்தத்திற்கு முகங்கொடுத்து அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து விரிவான நீண்டகால மீளமைப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது வரையிலான அரசாங்கத்தின் நோக்கத்தை வலியுறுத்தி, சூறாவளியால் நாட்டின் அனைத்து துறைகளுக்கும் ஏற்பட்ட பரந்த அளவிலான சேதங்கள் தொடர்பான மேலோட்டமான ஆய்வொன்றை திறைசேரி செயலாளர் இதன்போது முன்வைத்துள்ளார். இந்தத் தீர்க்கமான காலகட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தமது அர்ப்பணிப்பை சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் குழு உறுதிப்படுத்தியதுடன், நீடிக்கப்பட்ட நிதி வசதியின் 6வது தவணை விரைவில் இலங்கைக்கு கிடைக்கும் என்றும் கூறினர்.
















