அரசாங்கத்தின் வருமான இலக்குகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்ட சில வரிகளை மேலும் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் தேசிய மாநாட்டில் இன்று சனிக்கிழமை (31) கலந்துகொண்டு நாட்டின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலைப்பாடு குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதல் புதிய வரிகள் எதையும் அறிமுகப்படுத்தாமல் அரசாங்கம் தனது வருமான இலக்குகளை அடைந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி,
“நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து புதிய வரிகள் எதையும் விதிக்கவில்லை. மாறாக, தற்போதுள்ள சில வரிகளை கணிசமான அளவில் குறைத்துள்ளோம். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திலும் குறிப்பிட்ட சில வரிகளை மேலும் குறைப்போம்” எனத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வருமான இலக்குகளுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையிலேயே திட்டமிடப்பட்ட இந்த வரிக்குறைப்புகள் அமல்படுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முந்தைய அரசாங்கங்கள் தங்களது எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்குகளை அடைவதில் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்ததுடன், பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட தொகையில் சுமார் 90 சதவீதத்தை மட்டுமே திரட்டியதாக ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.
இருப்பினும், தற்போதைய அரசாங்கம் தனது வருமான எதிர்பார்ப்புகளை மிஞ்சியுள்ளதாகவும், முதன்மை வரவு செலவுத் திட்டத்தின் உபரியைப் பேணி வருவதாகவும், இது காலப்போக்கில் நாட்டின் கடன் சுமையைக் குறைக்க உதவும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக, குறிப்பாகப் பொருட்களின் விலையேற்றத்தினால் மக்களின் வாழ்வாதாரத்திற்கு மேலதிக அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி, மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவி வரும் மோதல்களும் சர்வதேச விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடைகளுமே இந்தப் பணவீக்க அழுத்தத்திற்குப் பிரதான காரணங்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.


















