‘ஆப்பிரிக்கா வரவேற்கிறது, டாக்கர் கொண்டாடுகிறது’ என்பது டாக்கர் 2026 இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் உத்தியோகபூர்வ கருப்பொருளாகும்.
பாரிஸில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) 142ஆவது அமர்வின் போது, டாக்கர் 2026 இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் ஏற்பாட்டுக் குழுவால் ‘ஆப்பிரிக்கா வரவேற்கிறது, டாக்கர் கொண்டாடுகிறது’ என்ற உத்தியோகபூர்வ கருப் பொருள் வெளியிடப்பட்டது.
ஆபிரிக்காவில் முதன்முறையாக நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு உலகை வரவேற்க செனகல் தயாராகி வருவதால், கொண்டாட்டங்கள் முன்னரே ஆரம்பமாகிவிட்டன.
இவ் விளையாட்டு இன்று இரவு நடைபெறவுள்ள ஒரு பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் ஆரம்பித்து வைக்கப்படும்.
இதைத் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் சுமார் 2,700 விளையாட்டு வீரர்கள், 25 வகையான விளையாட்டுப் போட்டிகளில் 153 தங்கப் பதக்கங்களை சுவீகரிக்க போட்டியிடவுள்ளனர்.
இவ் விளையாட்டு விழாவில் 14 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர், யுவதிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.
இப் போட்டிகள் டாக்கர், டியாம்னியாடியோ நகரம், சாலி கடற்கரை ஆகிய இடங்களில் நடைபெறும்.
பதக்க போட்டிகளைவிட பங்கேற்பு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் இளைஞர், யுவதிகளின் ஈடுபாட்டிற்கான வாய்ப்புகளை பத்து வகையான விளையாட்டுகள் வழங்கவுள்ளன.
ஆபிரிக்காவை தளமாகக் கொண்டுள்ள ஆறு மெய்வல்லுநர்கள் அகதிகள் ஒலிம்பிக் அணியில் இடம்பெறுகின்றனர்.
இவ் விளையாட்டு விழாவில் முதல் தடவையாக முழுமையான பாலின சமத்துவம் பின்பற்றப்படுவதுடன் அகதிகள் ஒலிம்பிக் அணியுடன் 204 தேசிய ஒலிம்பிக் குழுக்கள் சார்பாக விளையாட்டு வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.
இதற்கு அமைய 50 சதவிகித பெண்களுக்கும் 50 சதவிகித ஆண்களுக்கும் இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தலா 73 போட்டிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடத்தப்படவுள்ளன.
லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை நோக்கிய பயணத்தில் ஒலிம்பிக் ஒருமைபாட்டு புலமைப்பரிசில் தொகையைப் பெறும் 1580க்கும் மேற்பட்ட வீர, விராங்கனைகளளில் 13 பேர் டாக்கர் 2026 இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுகின்றனர்.
டாக்கரிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள புதிய நகரமான டியாம்னியாடியோவில், 55,000 பேர் அமரக்கூடிய ஸ்டேட் அப்துலாய் வேட் விளையாட்டரங்கில் ஆரம்ப விழா வைபவம் செனகல் நாட்டு நேரப்படி இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்கும்.
இந்த விளையாட்டரங்கில்தான் வில்வித்தைப் போட்டியும் நடத்தப்படவுள்ளது.
தொடக்க விழாவின் இயக்குநரான காடி நியாங் இந்த நிகழ்வு ‘நாம் யார், எங்கிருந்து வருகிறோம், எங்கு செல்ல விரும்புகிறோம் என்பதை உலகிற்கு எடுத்துரைக்க ஆப்பிரிக்காவிற்கு உதவும்’ என்று கூறினார்.
இந்தத் தயாரிப்பு, செனகல் அடையாளத்தையும் ஆப்பிரிக்காவின் கலாசாரப் பன்முகத்தன்மையையும் வெளிக்காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அடாமா டியோப் தொடக்க விழாவின் மேடை இயக்குநர் ஆவார்.
ஆரம்ப விழாவில் உலகெங்கிலும் உள்ள விளையாட்டு இளம் விளையாட்டு வீர, வீராங்கனைகள் மற்றும் பொது மக்களுடன், செனகல் நாட்டின் தலைவர் அதிபர் பஸ்ஸிரூ டியோமாயே ஃபே மற்றும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் கிறிஸ்டி கொவென்ட்ரி ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

















