நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2,749,504 மில்லியன் ரூபாவில் இருந்து 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2,883,669 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளமை பதிவாகியுள்ளது.
அத்துடன் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் நேரான வளர்ச்சி 4.9 சதவீதமாக பதிவாகியுள்ளது என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையின் தேசிய கணக்கு மதிப்பீடுகள் மற்றும் இரண்டாம் காலாண்டு (2025) தொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான உற்பத்தி அணுகுமுறையால் நடப்பு, நிலையான விலையில் மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அது தொடர்பான பொருளாதாரக் குறிக்காட்டிகளை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவை நடவடிக்கைகள் அனைத்தும் முறையே 2.0 சதவீதம், 5.8 சதவீதம், 3.9 சதவீதம் என்று உயர்வடைந்துள்ளன.
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு இலங்கைக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு விலையில், 2024 ஆம் ஆண்டின் அதே காலாண்டில் பதிவு செய்யப்பட்ட 6,661,030 மில்லியன் ரூபாவில் இருந்து 7,362,510 மில்லியனாக அதிகரித்துள்ளதுடன் இது நடப்பு விலை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நடப்பு விலையில் 10.5 சதவீத நேர் மாற்றத்தையும் பதிவு செய்கிறது.
பொருளாதாரத்தின் மூன்று முக்கிய பொருளாதார நடவடிக்கைகளான விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் ஆகியவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு விலையில் முறையே 10.1 சதவீதம், 25.1 சதவீதம் மற்றும் 52.8 சதவீதம் பங்களித்துள்ளன. அதேவேளை 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ‘பொருட்கள் மீதான வரிகள் மானியங்கள் நீங்கலாக’ என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.0 சதவீத பங்களிப்பை அதிகரித்துள்ளது.
பொருட்கள் மீதான வரிகள் மானியங்கள் நீங்கலாக 13.5 சதவீதம் அதிகரித்துள்ளன.மேலும் வரிகளின் வளர்ச்சி அதிகரித்த வாகன இறக்குமதியுடன் தொடர்புடைய வரிகளின் அதிகரிப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

















