-ரவிகரனின் கோரிக்கைக்கு பொலிஸார் பதில்-
-வி.சரவணன்-
முல்லைத்தீவில் சில பகுதிகளில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கிடையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பின்போதே ரவிகரன் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
கடந்த மாதம் 27ம் திகதி நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலைஞர்மடம் பகுதியில் இடம்பெறும் கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தமைக்கு அமைவாக உடனடியாக நடவடிக்கை எடுத்து கசிப்பு உற்பத்தி அங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்காக நன்றி கூறுகிறேன். அதேவேளை புதுக்குடியிருப்பு பொலிஸ்பிரிவில் வெள்ளைப்பள்ளம் கிராமத்திலும், முல்லைத்தீவு பொலிஸ்பிரிவில் கள்ளப்பாடு தெற்கு மற்றும் செம்லைக் கிராமங்களிலும் கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
ஆகவே, அது தொடர்பில் கவனம் செலுத்தி கசிப்பு உற்பத்தியை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிரேஷ்டபொலிஸ் அத்தியட்சகர், குறிப்பிட்ட பகுதிகளில் கசிப்பு உற்பத்தியை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


















