-பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்-
தமிழும், சிங்களமும் அரசகரும மொழியாக இருக்கின்ற போதும், அனர்த்த முகாமைத்துவ குழுவின் முன்னெச்சரிக்கை அறிவித்தல்களின் போது தமிழ் மொழியில் அவை வெளிவருவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் மற்றும் பெருவெள்ள அனர்த்தம் காரணமாக இறந்த சகல உறவுகளுக்கும் எனது அனுதாபங்களை அவர்களின் குடும்பத்தாருக்கு தெரிவித்துக்கொள்கின்றேன். கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களின் பாதுகாப்புக்காக சாலையை வெட்டும் போது ஐந்து கடற்படையினரும் உயிரிழந்திருந்தனர். அவர்களையும் நாங்கள் நினைவுகூருகின்றோம்.
அனர்த்த நிலைமைகளின் போது ஒவ்வொரு உத்தியோகத்தர்களும் மிகவும் நேர்த்தியாக பணியாற்றினர். இதன்போது கிராம சேவையாளர்களுக்கு இடையூறுகளும் நடந்துள்ளன.
பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் மக்கள் பணியை செய்துகொண்டிருந்த கிராமசேவகர் பாராளுமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்டுள்ளார். இது மிகவும் மோசமான காரியமாகும். மேர்வின் சில்வாவுக்கு பின்னர் இவ்வாறானவொரு பாராளுமன்ற உறுப்பினரால் அரச உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளமையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இது தொடர்பில் சபையினால் அந்த பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
மலையகத்தின் பல பகுதிகளுக்கும் சென்றேன். அங்கு மக்களை சந்தித்த போது அவர்கள் மிகவும் கவலையுடன் கண்ணீர்விட்டு அழுகின்றனர். இது மிகப்பெரிய அனர்த்தம் இந்த அனர்த்தம் தொடர்பில் அரசாங்கம் மீது பழிசொல்லவில்லை.
இலங்கையின் அனர்த்த குழுவின் அறிக்கை தனி சிங்களத்திலும் ஆங்கிலத்திலுமே வெளியிடப்படுகின்றது. கொழும்பில் இருந்து வெளியிடப்படும் அறிக்கைகள் தமிழில் வெளியிடப்படவில்லை. நாட்டில் தமிழும், சிங்களமும் அரசகரும மொழியாக இருக்கின்றது. ஆனால் தமிழ் மொழியில் இந்த அறிவித்தல்கள் வரவில்லை. மக்களுக்கு சரியாக அறிவித்தல்கள் சென்றடையவில்லை என்றார்.
















