முல்லைதீவு – கொழும்பிற்கு இடையிலான சொகுசுப் பேருந்து சேவை எமது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த சொகுசுப் பேருந்து சேவை நேற்று புதன்கிழமை காலை கொழும்பில் ஆரம்பிக்கபட்டதையடுத்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
முல்லைதீவிலிருந்து கொழும்பிற்கான குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து சேவை ஒன்று இன்மையால் முல்லைதீவில் மக்கள் இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வந்தனர்.
இதனால் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியர்கள், திணைக்கள உயர் அதிகாரிகள் முல்லைதீவிற்கு வருகைதந்து பணியாற்றுவதில் அதிக நாட்டம் கொள்ளாத நிலையும் காணப்பட்டது.
முல்லைதீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சொகுசுப் பேருந்து சேவை ஒன்றினை ஆரம்பிக்கவேண்டுமென என்னால் தீர்மானம் ஒன்று முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. உரிய அமைச்சிற்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்திலும் இது குறித்து அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் வலியுறுத்தியிருந்தேன்.
இவ்வாறு நான் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சொகுசுப் பேருந்து சேவையையிட்டு அமைச்சர் விமல் ரத்நாயக்கவிற்கு முல்லைதீவு மாவட்ட மக்கள் சார்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.


















