-செ.ரவிசாந்-
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய ஏக்கிய ராஜ்ஜிய ஒற்றையாட்சி அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இந்த அரசியலமைப்பு தமிழ்மக்களின் எதிர்ப்பின்றி நிறைவேறியதாகக் காட்டப்பட்டால் தமிழ்த்தேசிய இனம் தாங்களாகவே விரும்பி உரிமைகளைக் கைவிட்டதாக வரலாற்றில் உறுதி செய்யப்படும்.
அந்த மாபெரும் தவறு நிகழாமல் தடுப்பதாகவிருந்தால் நாங்களனைவரும் எங்களைச் செயற்பாட்டாளர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். மக்கள் மயப்படுத்தப்பட்ட கூட்டு விழிப்புணர்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறைகூவல் விடுத்துள்ளார்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நடாத்திய சமகால அரசியல் உரையரங்கு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்லூர் திவ்யஜீவன சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தமிழ்மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கொண்டு வந்து நிறைவேற்றப் போகின்ற ஏக்கிய ராஜ்ஜிய அரசியலமைப்புக்கு உறுதுணையாகவிருந்து அதனைத் தயாரித்துள்ள நிலையில் அவர்களை நம்பலாமா? என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
தமிழரசுக் கட்சியினரதும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் உள்ளவர்களினதும் கடந்த ஒருவருட காலச் செயற்பாடுகளை எடுத்து நோக்கினால் இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன. உண்மைநிலை நன்கு தெரிந்தும் கூட ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறே கோரி வருகின்றார்.
இவ்வாறான சூழ்நிலையில் புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வருகின்ற போது 19 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது பத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாவது ஏக்கியராஜ்ஜிய அரசியலமைப்புக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையை நாங்கள் வைத்திருக்க முடியாது.
புதிய ஏக்கிய ராஜ்ஜிய ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு இரண்டாம் கட்டமாக ஒரு சர்வஜன வாக்கெடுப்பைக் கோருகின்ற போது வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ்மக்கள் பெரும்பான்மையாகப் புதிய அரசியலமைப்பை நிராகரித்து வாக்களிப்பதன் ஊடாக மட்டும் தான் தமிழினத்தைக் காப்பாற்ற முடியும் – என்றார்.


















