தற்போதைய பொலிஸ்மா அதிபரின் சில நடவடிக்கைகள் அரசியல்மயமாகியுள்ளது. சில விசாரணைகள் அரசியல் மற்றும் ஊடகக் காட்சிப்படுத்தல்களாக மாற்றப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் பிரச்சார கட்டமைப்பின் ஓர் தரப்பாக பொலிஸ்மா அதிபர் மாறிவிட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விசேட கருத்தை முன்வைத்து தெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:-
உயிர் அச்சுறுத்தல் காணப்படும் ஜகத் விதான, குறித்த அச்சுறுத்தல்கள் தொடர்பாக முறைப்பாட்டாளராக செயற்படும் போது அவரை குற்றவாளியாக அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். பாதுகாப்பு வழங்குவது அரசியல்மயமாக்கப்பட்டுவிட்டதா அல்லது பாதுகாப்பை வழங்கும் பெரும் பொறுப்பை அரசியல்வாதிகள் தங்கள் கைகளில் எடுத்துள்ளனரா என்று கேள்வி எழுப்புகிறோம்.
ஜகத் விதான அவர்களது பாதுகாப்பு தொடர்பில் மிகவும் அவதானத்துடன் இருக்கிறோம். அரசாங்கம், பொலிஸ் மா அதிபர், சட்டம் மற்றும் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் உள்ளிட்ட சகலரும் ஜகத் விதானாவின் பாதுகாப்பை உறுதி செய்து, அவரது உயிரைப் பாதுகாக்க வேண்டும்.
220 இலட்சம் குடிமக்களுக்கு பாதுகாப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களினது பாதுகாப்பு தொடர்பில் அதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து பொலிஸ் மா அதிபர் கவனம் செலுத்தி, சகல எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கிறேன்.
ஜகத் விதான சிறந்த மக்கள் சேவைகளை ஆற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவராவார். அவரது பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்துவது நாட்டின் பாதுகாப்புத் தரப்புகளினது பொறுப்பாகும்.
பொலிஸ் தரப்பால் ஆற்ற வேண்டிய தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் சரியாக நிறைவேற்றப்படவில்லை. பொலிஸ் மா அதிபருக்கு கிடைக்கும் அறிக்கைகளை திரிபு படுத்த வேண்டாம். முறைப்பாட்டாளர்களை குற்றவாளிகளாக மாற்ற வேண்டாம் – என்றார்.


















