சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி சமரப்புலிகே அலி ரொஷான் என அழைக்கப்படும் நிராஜ் ரொஷான் தாக்கல் செய்துள்ள மனு எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுமதியின்றி யானையை வைத்திருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட அலி ரொஷான் என்பவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி அலி ரொஷான் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்துள்ளார்.
அலி ரொஷானின் பிணை மனு இன்று திங்கட்கிழமை அழைக்கப்பட்ட நிலையில் குறித்த பிணை மனு மீதான எதிர்ப்புகளை எதிர்வரும் 28 ஆம் திகதிக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் மஞ்சுல திலகரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் அலி ரொஷானின் பிணை மனு எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.


















