உலக வங்கியின் ஆலோசனை
அஸ்வெசும சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் போது புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம் என உலக வங்கியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
இதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சர்வதேச அனுபவத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கியின் பிரதிநிதிகள், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் கடந்த 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே ‘அஸ்வெசும திட்டம்’ குறித்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இதன்போது சமூகப் பாதுகாப்புக்கான தரவுத்தளத்தை உருவாக்குவதன் மூலம், உண்மையிலேயே வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய தனிநபர்கள், குடும்பங்களை அடையாளம் காண முடியும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
பிரஜைகளின் தகவல்களை சமூகப் பாதுகாப்பு தரவுத்தளத்தில் உள்ளிடுவது அவர்களை அஸ்வெசும அல்லது பிற தொடர்புடைய சலுகைகளுக்கு தகுதியுடையவர்களாக மாற்றாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளிடப்பட்ட தரவைச் சரிபார்க்க முடியும் என்றும், தொடர்புடைய சலுகைகளை துல்லியமாக அடையாளம் காண முடியும் என்றும் இந்தக் குழு வலியுறுத்தியது.
இந்தச் சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஒரு நாட்டிற்கு ஒரு உற்பத்தி முதலீடாகும், எனவே தரவுத்தளத்தைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கி ஆலோசகர் ஷாலிகா சுபசிங்க மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.


















