-சொ. வர்ணன்-
தேசிய மக்கள் சக்தி என்கின்ற ஜே.வி.பியினால் வடமாகாண கல்வித்துறை சீரழிவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடம்பெற்ற ஆசிரியர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
வடமாகாண கல்வித்துறையை ஜே.வி.பி தொழிற்சங்கங்களின் நலன்களுக்காக வளைப்பதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். வடக்கில் ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடுகள் நடந்துள்ளமை, ஆதாரங்களுடன் வெளிவந்துள்ள நிலையில் கடந்த திங்கட்கிழமை வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் நீதி கேட்டு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.
மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க முடியாமல் வடமாகாண ஆளுநர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரும் ஒழித்துத் திரிகின்றனர். நான் வடக்கில் பல ஆளுநர்களை கண்டிருக்கிறேன் அவர்களுடன் பல்வேறு சந்திப்புக்களை செய்திருக்கிறேன் ஆனால் தற்போதைய ஆளுநரை சந்திக்க முடியாமல் உள்ளது.
ஜே.வி.பியின் கைப் பொம்மையாக செயற்படும் தற்போதைய ஆளுநர் எமது கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை தெரிந்து எம்மை சந்தித்தால் ஜே.வி.பியின் நிகழ்ச்சி நிரல் தெரிந்துவிடும் என்பதால் ஒழிக்கிறார். மூன்று நாட்களாக பாடசாலைக்கு செல்லாது போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை சந்திக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் உள்ள ஆளுநர் எவ்வாறு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பார்.
ஊழல்களை ஒழிக்கப் போகிறோம் என ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி வடக்கு கல்வியை முடக்கும் வகையிலும் செயற்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயவை விரட்டியடிப்பதற்கு அதிபர் ஆசிர்யர்களின் போராட்டமே ஆரம்ப புள்ளி என்பதை இந்த அரசாங்கம் நன்கு அறியும்.
இடமாற்றத்தின்போது எமது ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை உதாசீனம் செய்துவிட்டு நீங்கள் நினைத்ததுபோல வடக்கு கல்வியை நடத்தலாம் என நினைத்து விடக்கூடாது.
எமது போராட்டத்தை வாக்குறுதிகளின் அடிப்படையில் முடிவுறுத்துகிறோம் ஆனால் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படாத விடுமானால் நாடு தழுவிய தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுவோம் – என்றார்.


















