கல்வித் துறைக்காகப் போராடியவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேதனக் கோரிக்கைகளை மறந்துவிட்டதாகவும், அவற்றை அரசாங்கத்திற்கு நினைவூட்ட வேண்டிய பொறுப்பு தொழிற்சங்கங்களுக்கு உள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கல்வித் துறைக்கான போராட்டங்களில், குறிப்பாக நிலுவையிலுள்ள மூன்றில் இரண்டு பங்கு வேதன உயர்வைப் பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்தில் ஆசிரியர்களும் அதிபர்களும் முக்கிய பங்காற்றியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எஞ்சிய வேதனத் திருத்தத்தை உடனடியாக வழங்குமாறு அப்போதைய ஜனாதிபதியை வலியுறுத்தி, கடந்த ஜூன் 26 ஆம் திகதி 10,000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொழும்பில் ஒன்றுகூடியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
அந்தப் போராட்டத்தின் போது பல ஆசிரியர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவர் இன்றுவரை கண்பார்வையற்ற நிலையில் உள்ளதாகவும் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
“இத்தகைய தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்ட பிறகு, இன்னும் நினைவூட்ட வேண்டிய விடயம் ஏதேனும் எஞ்சியிருக்கிறதா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
“ஆசிரியர்கள் முன்னெடுத்த போராட்டங்களின் ஒரு பகுதியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கம், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளை ஓரங்கட்டத் தீர்மானித்தால், அவற்றை நினைவூட்டி எமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்வதை எமது பொறுப்பாகக் கருதுகிறோம்” என அவர் மேலும் கூறினார்.

















