-இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன்-
-க.கனகராசா-
ஆசிரியர் சங்கங்களுடன் கலந்துரையாடல் இன்றி பெருந்தொகையான ஆசிரியர்களுக்கு தன்னிச்சையாக ‘சேவையின் தேவை’ என்ற அடிப்படையில் அதிகாரிகளால் செய்யப்படவுள்ள முறையற்ற இடமாற்றம் அரசியல் தலையீடுகளை மேற்கொள்வதற்கும் பாரபட்சமாக நடப்பதற்குமே வழிவகுக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெறும் இடமாற்றம் வருடாந்த இடமாற்றமாக இல்லாமல், ‘சேவையின் அவசியம் கருதி செய்யப்படும் இடமாற்றமாக’ தொழிற்சங்கங்களின் பங்களிப்பின்றி மேற்கொள்ளப்படுவது சட்ட விரோதமானதாகும்.
வடக்கு மாகாணத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான இடமாற்றப் பட்டியல் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் வடமாகாண ஆளுநரின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் 2025 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் பிரசுரிக்கப்பட்ட வருடாந்த இடமாற்றத்துக்கான ‘சேவையின் தேவை கருதிய’ இடமாற்றப் பட்டியலில் காணப்பட்ட குறைபாடுகள் சீர்செய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்படவுள்ளதாகவும்,சேவையின் தேவை கருதிய திருத்தப்பட்ட புதிய பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் தாபன விதிக்கோவையின் அத்தியாயம் III பிரிவு 3.3 ‘இடமாற்றத்தக்க 25 அல்லது அதனிலும் கூடிய தொகையினரைக் கொண்ட பணியாளர்கள் உள்ள ஒவ்வொரு திணைக்களத்திலும் இடமாற்றச்சபை ஒன்றோ அதற்கு மேற்பட்டனவோ நிறுவப்படவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில் வருடாந்த இடமாற்றம் செய்யப்படும் வரையில் பிற்போட முடியாது என்ற சூழல் ஏற்பட்டால் மட்டுமே, தத்துவம் அளிக்கப்பட்ட அதிகாரியால் குறித்த வகை இடமாற்றம் மேற்கொள்ள முடியும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முறையற்ற இடமாற்ற நடைமுறை பின்பற்றப்பட்டால் இலங்கை ஆசிரியர் சங்கம் தொழிற்சங்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்பதை வெளிப்படுத்துகின்றோம் என அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















