-க.கனகராசா-
பாடசாலைகளில் வினைதிறனாக இயங்கும் ஆசிரியர்கள் மீது தற்காலத்தில் அபகீர்த்தியை உண்டாக்கின்ற செயற்பாடுகள் இடம்பெறுவதாக உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
பாடசாலைகளில் வினைதிறனாக இயங்கும் ஆசிரியர்கள் மீது அபகீர்த்தியை ஏற்படுத்த முனையும் வினைதிறன் அற்ற சிலர் பாடசாலைக்குள் இயங்குகின்றனர்.
இவ்விடத்தில் கல்வித் திணைக்களம் அதிக கரிசனை காட்டவேண்டிய கடப்பாட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளது. அதாவது பாடசாலைகளில் மாணவர்களின் ஆற்றல்களை திறன்களை வெளிப்படுத்துவதற்கும் ஒழுக்கத்தைச் சீர்செய்து ஆளுமைமிக்க நல்லபிரஜைகளை உருவாக்க தம்மை அர்ப்பணித்து பணியாற்றும் ஆசிரியர்கள் இலக்கு வைத்து அபகீர்த்தி ஏற்படுத்தப்படுகின்றது.
மாணவர்கள் மீது அதிக செல்வாக்கினை பெறும் ஆசிரியர்களை அதே பாடசாலையில் உள்ள சில அதிபர்கள் மற்றும் சில ஆசிரியர்கள், மாணவர்களை பகடைக்காயாக்கி பெற்றோர்களையும் வலிந்திழுத்து துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டை ஆதாரமற்ற முறையில் பிரயோகித்து வினைதிறனுடன் செயல்படும் ஆசிரியர்களை பழிவாங்கி பாடசாலையில் இருந்து வெளியேற்ற முயல்கிறார்கள். இன்று இச் செயற்பாடு பரவலாக நடைபெறுகின்றது. ஒரு ஆசிரியர் தீமூட்டி தன்னைத்தானே தீச்சுவாலையாக்கியமை எல்லோரும் அறிந்ததே,
குற்றம் செய்பவர் தண்டிக்கப்பட வேண்டும். சமூகத்தில் இருந்து தப்பித்துவிடக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் திட்டமிட்டு மாணவர்களின் நன்மை கருதி செயல்படும் ஆசிரியர்களை குறிவைப்பதானது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல எதிர்கால மூகத்தையே இருளாக்கிவிடும்.
இவ்வாறான பிரச்சனைகளை கையாள இரகசிய குழு அமைத்து சரியான முறையில் பக்கச்சார்பின்றி செயலாற்றி மாணவர்களின் நன்மை கருதி செயல்படுபவர்களை சமூக இகழ்ச்சிக்கு ஆளாக்காது, தப்புசெய்பவர்களை சமூகத்தின் முன் நிறுத்துங்கள். நாங்களும் உங்களுடன் வருகிறோம்.
இது தொடர்பில் ஊடகசமூகத்திற்கு பாரிய பொறுப்பு உள்ளது.
ஏனெனில் ஒழுக்கத்தில் முன்னின்ற தமிழினம், தற்போது ஒழுக்கம் என்றால் என்ன என கேட்கும் வகையில் செயல்படுகிறது. இதையும் தாண்டி பல ஆசிரியர்கள் கைகட்டி வேடிக்கை பார்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவது எம் மாணவர்களே என்பதைப் புரிந்து எல்லோரும் ஒன்றாக ஒற்றுமையாக செயலாற்ற முன்வர வேண்டும் – என்றார்.


















